சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக திரையரங்குகளில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றப் படங்களான ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும், தமிழகத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி நேரடியாக வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தப்படத்தை, சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இதேபோல், த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்த படம் ‘ஜெய்பீம்’. ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடும் வழக்கறிஞரின் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தில், முன்னாள் நீதிபதி சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டனும், அவரது மனைவியாக லிஜோமோல் ஜோஸும் நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டுப் படங்களுமே, ஓ.டி.டி. தளத்தில் இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால், பெரும் வசூல் சாதனை புரிந்திருக்கும் என்று பலரும் கூறியிருந்தனர்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, நடிகர் வினய் ராய், நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி, இயக்குநர் பாண்டிராஜ், நடிகை ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நேற்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டனர். இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் வெளியாகின்றன. வருகிற 23-ம் தேதி தனது 47-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் நடிகர் சூர்யா.

இதையொட்டி வருகிற 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவின் பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளவும் அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.