அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசால், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் `டெல்லி மாடல்’, பல மாநில முதல்வர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை மேலும் ஒருபடி சிறப்பிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங், சிங்கப்பூரில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக கெஜ்ரிவால், உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிவேண்டி, பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வராதது குறித்து கெஜ்ரிவால் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கெஜ்ரிவால், “நான் ஒன்றும் குற்றவாளியல்ல, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நான். இருப்பினும், நான் ஏன் உச்சிமாநாட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அது மட்டுமல்லாமல், இந்தப் பயணம் இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று நினைக்கிறேன். அதே போல், நாட்டின் உள் வேறுபாடுகள் எதுவும் உலக அரங்கில் பிரதிபலிக்கக் கூடாது” எனக் கூறினார்.
முன்னதாக பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில், “உலக உச்சிமாநாட்டில் டெல்லி மாடலை முன்வைக்க, சிங்கப்பூர் அரசு எங்களை அழைத்திருக்கிறது. இந்த அழைப்பு நாட்டுக்குப் பெருமையும், கௌரவமும்கூட. உச்சிமாநாட்டின்போது, உலகின் பல பெரிய தலைவர்களின் முன்னிலையில் டெல்லி மாடலை முன்வைக்க வேண்டும். முழு உலகமும் டெல்லி மாடலை பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறது. டெல்லியின் சுகாதாரம் மற்றும் கல்வி மாடலால் உலகமே ஈர்க்கப்பட்டிருப்பது இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும்” என கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.