கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் எ.வ வேலு, நியாயம் கேட்க போனவர்கள் இதுபோன்ற செயல்களிலா ஈடுபடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததில் பள்ளி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, அலுவலக அறைகள் உட்பட தீவைத்து கொளுத்தப்பட்டது. இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ. வேலு மற்றும் சி.வி கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘’சமூக வலைதளங்களில் தொடர்பை ஏற்படுத்தி தவறான தகவல்களை பரப்பி மாணவர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மட்டுமல்ல பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளியை சூழ்ந்து தவறான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். எந்த அமைப்பாக இருந்தாலும் முறையான போராட்ட அணுகுமுறையை கையாண்டிருக்கலாம். காவல்துறை வாகனங்கள் உள்பட 48 இருசக்கர வாகனங்கள், 67 பெரிய வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 3200 மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
நியாயம் கேட்க போனவர்கள் இதுபோன்ற செயல்களிலா ஈடுபடுவார்கள்? இவர்கள் மாணவர்கள் என்ற பெயரில் வந்த விஷமிகள். கலவரத்தில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் சிறப்பான நடவடிக்கையால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. துப்பாக்கி சூடு ஏதுமின்றி கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மறு உடற்கூறு ஆய்வு நாளை நடைபெறும். மாணவியின் குடும்பத்தினர் வந்தவுடன் உடற்கூறு ஆய்வு நடத்தப்படும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்; கலவரத்தில் ஈடுப்பட்டவர்கள், தூண்டியவர்கள், முன்னின்று நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க குழு அமைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F458301215728767%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM