இப்போது ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா லாக்டௌன் சூழலினால் வெளிநாடு செல்லாமல் இருந்த அஜித், இப்போது அதற்கான சூழல் இருப்பதால், தன் ரிலாக்ஸ் ட்ரிப்பில் ரெஃப்ரெஷ் ஆகிக்கொண்டிருக்கிறார். அவர் எப்போது சென்னை திரும்புகிறார், ‘AK 61’ படப்பிடிப்பில் எப்போது இணைகிறார் என அவரது வட்டாரத்தில் விசாரித்தோம்.
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘ஏகே-61’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னையைத் தொடர்ந்து நிறைவு கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணூர் பகுதிகளில் நடந்த படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய், வீரா உட்படப் பலர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அத்துடன் சில பேட்ச் ஒர்க் ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது.
அஜித்தின் ‘வலிமை’யில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இணைந்து நடித்தது போல அவரது அடுத்த படமான ‘ஏகே 61’ படத்தில் மற்றொரு தெலுங்கு நடிகரான அஜய் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே அஜித்தின் ‘கிரீடம்’, விஜய்யின் ‘வேலாயுதம்’, சூர்யாவின் ’24’ உட்படச் சில தமிழ்ப் படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் தெலுங்குப் படங்களான ‘புஷ்பா’, ‘சர்காரு வாரி பாட்டா’, ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் ‘கிரீடம்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஜய். ஹைலைட் என்னவென்றால் ‘கிரீடம்’ படத்தில் இவர்தான் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர். ‘AK 61’ படத்தில் இவர் இன்னமும் அஜித்துடனான காம்பினேஷன் காட்சிகளில் நடிக்கவில்லை. இனிமேல்தான் அதற்கான படப்பிடிப்புகள் தொடங்கும்.
அஜித்தின் ஐரோப்பிய டூர் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அநேகமாக இன்னும் சில தினங்களில் அவர் சென்னை திரும்பிவிடுவார் என்றும், இம்மாத இறுதியில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள். அஜித் தொடர்ந்து 25 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். படம் தீபாவளி வெளியீடு என்பதால், ஒரே மூச்சாகப் படப்பிடிப்பு நடக்கிறது என்றும் தகவல். இன்னொரு விஷயம், இந்த ஷெட்யூலில் அவர் தன் கெட்டப்பை மாற்றவிருக்கிறார். புனே, ஹைதராபாத், சென்னை உட்படப் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றும் சொல்கிறார்கள்.