கேரள மாநிலத்தில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, உலக நாடுகளை, மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை நோய், குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாக ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன. உடலில் கொப்பளங்கள் போல் பரவும் இந்த நோய், தற்போது உலகை பயமுறுத்தி வருகிறது.
குரங்கம்மை நோய், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன் முதலில் காங்கோ நாட்டில் 1970 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் இந்நோய் மனிதனுக்கு பரவுகிறது. உலக சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி, உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று, கேரள மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் துபாயில் இருந்து கேரள மாநிலத்திற்கு திரும்பினார்.
அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதோடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு திரும்பிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.