“3,000 மாணவர்களின் ஆவணங்கள், 67 வாகனங்கள் எரிப்பு” – கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரத்தில் 3,000 மாணவர்களின் ஆவணங்கள் மற்றும் 67 வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய வன்முறை கும்பல், அங்கிருந்த பேருந்துகள், போலீஸாரின் பைக்குகளை தீவைத்து எரித்தனர். கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 67 போலீஸார் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில், “தொடக்கத்தில் சாலை மறியல், போராட்டம் என்ற பெயரில் சிறிய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அமைச்சர் கணேசன், மாணவியின் பெற்றோருடன் பேசினார். அப்போது அவரது பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம் என்று தெரிவித்தனர்.

வாட்ஸ் அப் குழுக்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டது. பழைய மாணவர்கள் என்ற போர்வையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுக்களின் செய்தி பரப்பப்பட்டது. இந்த தவறான செய்தியை கேள்விப்பட்டு பல இடங்களில் இருந்து வந்ததவர்கள் தவறான காரியத்தை செய்து இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் எல்லாம் ஜனாநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். எனவே, அவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம், உண்ணாரவிரதம் செய்து இருக்கலாம். இதை செய்யாமல் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை எரித்துள்ளனர்.

காவல் துறையின் பாதுகாப்பு வாகனங்களையும் கொளுத்தியுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிறகு நீதிமன்றம் கூறியதைதான் கேட்க முடியும். 3,000 மாணவர்களின் டி.சி உள்ளிட்ட ஆவணங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் என்ற பெயரியில் விஷமிகள் இதைச் செய்துள்ளனர். இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 100-க்கு மேற்பட்ட காவல் துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வளவு நடந்தும் காவல் துறை சிறப்பாக கையாண்ட காரணத்தால்தான் வேறு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் விரும்பத்தகாதது.

நாளை உயர் நீதிமன்ற உத்தரவின்படி மறு உடற் கூராய்வு நடைபெறும். சட்டப்படி குற்றம் செய்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தூண்டி விட்டவர்களை கண்டறிய உயர் நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்படும். இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 22 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த கைது நடவடிக்கை தொடரும்.

பள்ளியை மீது திறக்கக் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர். இந்த ஆய்வு தொடர்பாக முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.