இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களம் காண்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிரதமர் அலுவலகத்தில் வாக்களித்தார். இந்தியா முழுவதும் எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ, எம்.பி-க்கள் தலைமைச் செயலகத்தில் வாக்களித்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது மொகிம் என்பவர் பா.ஜ.க கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நான் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனால் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்திருக்கிறேன். மண்ணுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று என்னுடைய மனதில் தோன்றியது. இதன் காரணமாக அவருக்கு வாக்களித்தேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.
பா.ஜ.க கூட்டணி வேட்பாளருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக்களித்திருப்பது அந்தக் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.