புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட திமுக எம்பிக்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.சமீபத்தில் தமிழகத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவை பொருத்தமட்டில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியவுடன் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், நாமக்கல் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வடசென்னை இரா.கிரிராஜன், காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம், அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக அதிமுக எம்பி தர்மர் மட்டும் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டார். இவருடன் சேர்த்து புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக எம்பிக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.