டெல்லி: பெற்றோரிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகம்; நைஜீரிய இளைஞருடன் கைதான அமெரிக்கப் பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரின் 27 வயது மகள், கடந்த மே 3-ம் தேதி அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அந்தப் பெண் கடத்தப்பட்டதாகப் புகார் வந்திருக்கிறது. அந்தப் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போகும் முன்பு, அவளுக்குத் தெரிந்த ஒருவரால் அவர் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும், தாக்குதலுக்குள்ளான அவர், தான் ஆபத்தான நிலையில் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி வீடியோ மூலம் பாதிக்கப்பட்ட பெண் தன் தாயாரிடம் பதற்றத்துடன் பேசியதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சாணக்யபுரி காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

கைது

ஆரம்பத்தில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐ.பி முகவரியையும், வீடியோ அழைப்பின்போது பயன்படுத்தப்பட்ட வைஃபை ஐ.பி முகவரியையும் காவல்துறை, அமெரிக்கன் சிட்டிசன் சர்வீஸ் நிறுவனத்தின் உதவியுடன் கண்டுபிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த வைஃபை பயன்படுத்தப்பட்ட செல்போன் ஐ.பி-யை சோதனையிட்டபோது குருகிராமிலிருந்த 31 வயதான நைஜீரியா நாட்டவரின் செல்போன் ஐ.பி முகவரி வீடியோ உரையாடலுடன் பொருந்தியது. அதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்து விசாரித்தபோது, ​​கிரேட்டர் நொய்டாவில் அந்தப் பெண் இருப்பதாகத் தெரியவந்தது.

பணம்

உடனே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்கு விரைந்த போலீஸார், அவரை விசாரித்ததில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. அதனால் போலீஸார் அந்தப் பெண்ணையும் கைதுசெய்தனர். இந்த கடத்தல் நாடகம் தொடர்பாக காவல்துறை தரப்பு, “அமெரிக்கப் பெண் இந்தியா வந்தவுடன் கொண்டுவந்த பணத்தைச் செலவழித்துவிட்டார். எனவே தன் பெற்றோரிடம் பணம் பறிக்க, தனக்கு பார்ட்டியில் அறிமுகமான நைஜீரிய நண்பருடன் சேர்ந்து இந்தத் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார். பெண்ணின் விசா ஜூன் 6-ம் தேதி காலாவதியாகிவிட்டது. மேலும் நைஜீரிய நபரின் பாஸ்போர்ட்டும் காலாவதியானது தெரியவந்திருக்கிறது. இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.