சேலம்: “ஆளுங்கட்சியினர் நிர்வாக சீர்கேட்டால்தான், சின்னசேலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடக்க காரணமாகிவிட்டது” என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கருத்து கூறியுள்ளார்.
சேலத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஆடி மாதம் அம்மன் கோவில்களில் அரசே கூழ் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது: ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி இறப்பு துரதிஷ்டமானது.
இறந்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து பேசி சந்தேகங்களை தீர்த்து வைத்திருந்தால் பிரச்சினை தீர்வு கிடைத்திருக்கும். சின்னசேலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த சம்பவத்தில் போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் சதி செய்து வாகனங்களை எரித்து கலவரமாக மாற்றியுள்ளனர். ஆளுங்கட்சியினர் நிர்வாக சீர்கேட்டால்தான் சின்னசேலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடக்க காரணமாகிவிட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வன்முறையைக் கண்டித்து அடையாள வேலைநிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள உத்தரவு அராஜகமானது. அவர்களுக்கும் போராட உரிமை உள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான சர்ச்சை குறித்த கேள்வி விவகாரத்தில், கேள்வித்தாள் தயாரித்தவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.