விருதுநகர்: பணம், நகைக்காக 2 நாள்களில் 5 பேர் கொலை; வடமாநில கும்பல் கைவரிசையா? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர்கள் சங்கரபாண்டியன்- ஜோதிமணி தம்பதியினர். ஓய்வுபெற்ற ஆசிரியர்களான இவர்கள் தனியே அந்தப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் சதீஸ். திருமணமாகி, சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார். மகனைப் பிரிந்து சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியினர் தனியே அருப்புக்கோட்டை வீட்டில் வசித்து வருவதால், அவர்களின் உடல்நலன் கருதி உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வது வழக்கம்.

அதே போல், இன்று பிற்பகலிலும் வழக்கம்போல் அவர்களின் உறவினர்கள் சங்கரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் சங்கரபாண்டியனும், அவர் மனைவி ஜோதிமணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து, உடனடியாக போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸார், சங்கரபாண்டியன்-ஜோதிமணி தம்பதியினர் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

கொலை

தொடர்ந்து, வீட்டைச் சோதனை செய்ததில், வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சிதறடிக்கப்பட்டுக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சம்பவம் குறித்து போலீஸாரிடம் பேசினோம். “வீட்டை நோட்டமிட்டுக் கொள்ளையடிக்க வந்த கும்பலுக்கும், அந்தத் தம்பதியினருக்கும் இடையே நடந்த போராட்டத்தில் சங்கரபாண்டியனும், ஜோதிமணியும் கழுத்தறுக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறோம். ஏனெனில் வீடு முழுவதும் அலங்கோலமாய் கிடந்ததுடன், பணம், நகைகளும் கொள்ளைப்போனதாகத் தெரிகிறது. போலீஸ் மோப்பநாய் பின்தொடரக்கூடாது என்பதற்காக, வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியையும் கொலையாளிகள் தூவிச்சென்றுள்ளனர்” என்றனர்.

தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைவிரல் ரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மதுரை டி.ஐ.ஜி பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீட்டுக்கு வெளியே, மோப்பநாய் கொண்டும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கைப்பற்றியும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருப்புக்கோட்டையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவமாக, சாத்தூர் அருகே அமீர்பாளையம் முனியசாமி கோயில் பின்புறம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக சாத்தூர் தாலுகா போலீஸூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கு இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றம்

இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் சாத்தூர் அருகேயுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானிக்குமார் (45) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் லாரிகளுக்கு லோடு ஏற்றும் புரோக்கர் வேலை செய்து வந்தவர். பவானிக்குமாருக்கு வேளாங்கன்னி என்னும் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், பவானிக்குமார் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டதன் காரணம் என்ன? அவரைக்கொன்ற கொலையாளி யார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல, கடந்த 16-ம் தேதி ராஜபாளையம் டி.பி.மில்ஸ் தெருவைச் சேர்ந்த முதிய தம்பதி ராஜகோபால்-குருபாக்கியம் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில், “தனியார் சிமெண்ட் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜகோபால். ஓய்வுக்குப் பிறகு வட்டிக்குப் பணம் கொடுக்கல்-வாங்கல் பிசினஸ் செய்து வந்துள்ளார். ராஜகோபால்-குரு பாக்கியம் தம்பதியினருக்கு குருராமச்சந்திரன், கணேஷ்ராம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருவதால், ராஜகோபாலும், குருபாக்கியமும் ராஜபாளையத்தில் உள்ள வீட்டில் தனியே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து இரண்டு நாள்களாக ராஜகோபாலின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று(17-ம்தேதி) அவரது வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது வீட்டின் படுக்கையறையில் தம்பதியினர் இருவரும் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளனர்.

விருதுநகர்

உடனே இது தொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவித்ததும், அங்கு சென்று சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால் சந்தேக மரணம் என்றே முதலில் சொல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்ததையடுத்து சந்தேக மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கொலை நடந்த வீட்டில், போலீஸ் மோப்பநாய் மூலம் துப்புத்துலக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவிச்சென்றுள்ளனர். எனவே தற்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர் நடமாட்டம் குறித்தும், சம்பவம் நடந்த தேதியில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் கொலையாளிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளோம். ராஜகோபால் வட்டிக்குப் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததால் தொழில் ரீதியாக யாரேனும் முன் விரோதம் கொண்டு அவர்களைக் கொலை செய்தார்களா? என்ற ரீதியில் முதற்கட்டமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக 3 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர், தனியார் சிமெண்ட் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் மற்றும் அவர் மனைவி, லாரிக்கு பாரம் ஏற்றும் புரோக்கர் என இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 5-ஆக உயர்ந்துள்ளது. ஆனால் எந்த வழக்கிலும் யாரும் கைதுசெய்யப்படவில்லை. எனவே போலீஸாரின் விசாரணையிலிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு வரும் மர்ம நபர்கள் முதியோர்களைக் குறி வைத்து கொலை செய்திருப்பதைப் பார்க்கையில், விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் இந்த சம்பவங்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களின் கைவரிசையாக இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் பதிந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.