திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள சபரிமலையில் கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் காலை முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. சாதாரணமாக மாத பூஜைகள் நடைபெறும் போது சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் நேற்று வழக்கத்தைவிட சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.நேற்று ஆடி மாதம் முதல்நாள் என்பதால் அதிகாலை முதலே தரிசனத்திற்காக பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரும் நாட்களிலும் இதே போல பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆன்லைன் முன்பதிவை கேரள போலீஸ்தான் இதுவரை நிர்வகித்து வந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த பொறுப்பு சமீபத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.