`மின் கட்டணத்தில் மாற்றம்!' – அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தது என்ன? – முழு தகவல்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவிகிதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை . அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி எண்.222-ன் படி, நிலைக்கட்டணம் இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயனடைவர்.

செந்தில் பாலாஜி

தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். இரு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (26.73 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (15.30 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 மட்டும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.297.500 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்கட்டண முக்கிய அம்சங்கள்

இரு மாதங்களுக்கு மொத்தம் 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (1.32 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.155 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 700 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.96 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.83 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.275 மட்டும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 800 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 1.26 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.53 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.395 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு மொத்தம் 900 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 0.84 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (0.35 சதவிகிதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.565 மட்டுமே உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மேலும் தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி, “தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 250 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா, ஏற்கெனவே இருந்த கட்டணங்களிலிருந்து உயர்த்துவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 65 பைசா மட்டுமே உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிற திட்டங்களை பொறுத்தவரையில் மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம் இப்போது புதிய நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்துக்குரிய மின் மானியத்தை, நுகர்வோர் விரும்பும் பட்சத்தில் தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டிருகின்றது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகை விடப்பட்டதை தவிர மற்ற கூடுதல் மின் இணைப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 225 வசூலிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. நாளின் உச்ச நுகர்வு நேரம் காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய கடனில் சிக்கி தவிக்கிறது. நாம் கடனே வாங்க முடியாத அளவுக்கு ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை மாற்றி அமைக்காவிட்டால் அவர்களுக்கான கடன் வழங்கக்கூடிய அந்த நிலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனால் எந்த வங்கிகளிலும் கடன் பெற முடியாத ஒரு சூழலுக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கிறோம். அதனால் தான் இந்த முடிவு” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.