வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தமிழ் மற்றும் மலையாள திரை உலகின் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனராக இருந்த பிரதாப் போத்தன்… உடல் நலக்குறைவினால் ‘தவறினார்’ என்ற செய்தியை கேட்டதும் மனம் பதபதைத்தது. தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள அவர் 1978 ஆம் ஆண்டு வெளியான ஆரவம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தமிழில் முதன்முறையாக 1979 ஆம் ஆண்டு “அழியாத கோலங்கள்” படத்தின் மூலம் தோன்றினார். தொடர்ந்து இளமைக் கோலங்கள், மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம், குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், பெண்மணி அவள் கண்மணி, ஜல்லிக்கட்டு… போன்ற படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் இவருக்கு பெரும் வெற்றியைப் பெற்று தந்தது.. ஜோதிகா நடிப்பில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருப்பார். நடிகர், இயக்குனர் ,திரைத் தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்ட இவர் மை டியர் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ( நடிகர் நெப்போலியன் வாழ்வில் ‘சீவலப்பேரி பாண்டி’திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது) தமிழில் முதன்முறையாக கமலஹாசன் நடித்த ‘வெற்றிவிழா’ திரைப்படத்தில் ஸ்டெடி கேமராவை பயன்படுத்தியவரும் இவரே.
இவர், தான் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை ‘திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதாப் போத்தன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.
“மூடுபனி’ திரைப்படத்தில் இடம் பெற்ற
” என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
தொடருதே தினம் தினம் தர தர தா த் த த” என்ற பாடலை… காலம் உள்ளளவும் எவரும் மறக்க முடியாது. “மூடுபனி” திரைப்படம் என்றாலே நம் மனதில் உடனே நினைவுக்கு வரும் பாடலாக இது கல்வெட்டு போல் அமைந்து விட்டது. ஜேசுதாஸ் மிக அருமையான மெலடியாக ஒரு வகையான துள்ளலுடன் பாடியதை… திரையில் அழகாக வாயசைத்திருப்பார் ப்ரதாப்போத்தன் கிட்டார் பயிலும் இளைஞர்களின் பால பாடமாகவே இந்தப்பாடல் பிறகு மாறியது. இந்தப்பாடலை கண்ணை மூடி கேட்க நம் கண் முன்னே வருபவர் இன்றளவும் பிரதாப் போத்தன் அவர்கள் தான். இன்றளவும் கித்தாரில் ஒரு பாடல் இசைக்க வேண்டும் என்றால் அனைவரும் தேர்ந்தெடுப்பது இந்த பாடலை தான்…
எத்தனை முறை கேட்டாலும் உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கும் பாடலிது. எந்த ஒரு ஆணும் பதின் பருவத்தில் வாழ்நாளில் ஒரு நாளாவது இந்த பாடலை கேட்டு மனதில் முணுமுணுக்காமல் இருந்திருக்க முடியாது. உளவியல் சார்ந்த ஒரு அழகான திரில்லர் படமான மூடுபனியில் உளபாதிப்பு உள்ள இளைஞனாக பிரதாப்போத்தன் அருமையாக நடித்திருப்பார். மன்னிக்கவும் வாழ்ந்திருப்பார். விசு அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘பெண்மணி அவள் கண்மணி’ திரைப்படத்தில் பரந்தாமன்என்ற கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பி இருப்பார். அப்பாவை எதிர்க்கவும் முடியாமல், அப்பா செய்வதை ஒத்துக் கொள்ளவும் முடியாமல் முழிப்பவர் என… படத்தில் அதகளம் செய்திருப்பார். படத்தில் அவரின் முழி மட்டுமே பேசும் அது ஒரு அழகிய கவிதை. வாழ்வே மாயம் “திரைப்படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை கரம் பிடிக்கும் கணவனாக நடித்திருப்பார். வறுமை நிறம் சிகப்பு என்ற திரைப்படத்தில் பிரதாப் நாடக கம்பெனி இயக்குனராக அச்சு அசலாக அப்படியே நடித்திருப்பார். பிரதாப் நடித்த அழியாத கோலங்கள் மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற படம் .
இப்படி… தன் ஒவ்வொரு படத்திலும் முத்திரையை பதித்த ‘என் இனிய பொன் நிலாவே”‘
‘ நிலவு’ மறைந்தது.
ஆனால் எங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்கள் மறைவில்லை சார் !
என்றும் எங்கள் இனிய பொன் நிலாவாகவே எங்கள் மனதிற்குள் (பௌர்ணமியாக ஜொலிப்பீர்கள்)இருப்பீர்கள்!
விண்ணுலகில் சென்று’ என் பொன் என் இனிய பொன் நிலாவை பாடுங்கள்’
கேட்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்களின் ஆத்மா சாந்தியடைய விரும்பும் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளில் ஒருவர்
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.