பிளான் போட்டு கஞ்சா கும்பலை தூக்கிய காவல்துறை..!!

தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துவருகின்றனர்.

அந்த வகையில், தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாம்பரம் மாநகர போலீசார் கண்காணித்து வந்த நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இரு மாணவர்கள் மறைவிடத்தில் புகை பிடித்தனர். உடனே அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா புகைத்ததை ஒப்பு கொண்டனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், வடபழனியை சேர்ந்த மோகன் என்பவர், தங்களுக்கு கஞ்சா வழங்கியதாகவும், அவருக்கு ஜிபே மூலம் பணம் அனுப்பினால் கஞ்சா வழங்குவார் என்றும் தெரிவித்தனர்.

Ganja

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி கஞ்சா கேட்டு ரூ. 12 ஆயிரத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளனர். பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன் போரூரில் வந்து கஞ்சாவை வாங்கி செல்லும்படி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இரு மாணவர்களுடன் போலீசார் போரூர் விரைந்து சென்றனர். அங்கு மாணவர்களிடத்தில் கஞ்சாவை கொடுத்த போது மறைந்து இருந்த போலீசார் மோகனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடத்தில் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மோகனிடம் நடைபெற்ற விசாரணேயில், அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவர் தனக்கு கஞ்சாவை கொடுப்பதாகவும் அதற்கு முன் செந்திலுக்கு ஜிபே மூலம் பணம் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, செந்திலுக்கும் ரூ. 15 ஆயிரத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளனர். பணத்தைப் பெற்றுக் கொண்டு செந்தில் அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே வர சொல்லியுள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் ஆட்டோவில் வந்த செந்திலையும் உடன் வந்து திலீப்குமாரையும் பிடித்து ஆட்டோவை தணிக்கை செய்ததில் 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

செந்திலிடம் நடத்த விசாரணையில், அம்பத்தூரை சேர்ந்த முரளியிடம் பணம் கொடுத்து அனுப்பினால் விசாகப்பட்டினம் அருகில் உள்ள துளி என்ற ஊருக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி டிராவல் பேக்கில் துணிகளுக்கு இடையில் மறைத்து ரயிலில் எடுத்து வருவதாகவும் அதை திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் தனி வீடு வாடகைக்கு எடுத்து அதில் வைத்து மூன்று பேரும் ஏரியா பிரித்து விற்பனை செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.

Kanathur

இதன் அடிப்படையில் வேப்பம்பட்டில் உள்ள வீட்டை போலீசார் சோதனை செய்ததில் அங்கும் 4 கிலோ கஞ்சா கிடைத்துள்ளது. மொத்தம் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மோகன் செந்தில் மற்றும் திலீப் குமாரை கைது செய்து, அவர்கள் பயன்படுத்தி வந்த ஆட்டோ மற்றும் கஞ்சா விற்ற ரூ. 15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ் கூறியதோடு, திறன் பட செயல்பட்ட கானத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தன்ராஜ் மற்றும் அவருடன் பணி செய்த போலீசாரையும் வெகுவாக பாராட்டினர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.