லக்னோ : பாபர் மசூதி இடிப்பு வழக்கில், 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் துவங்கியது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 1992, டிச., 6ல், பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்து தள்ளினர்.
இது தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட உ.பி.,யின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங், பா.ஜ., மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை, சி.பி.ஐ., தனி நீதிமன்றம் விடுதலை செய்தது.’குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கரசேவகர்களை சந்தித்து பேசியதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ., வழங்கவில்லை; நாளிதழ்களில் வந்த தகவல்கள், ‘டிவி’க்களில் வெளியான ‘வீடியோ’ ஆகியவற்றின் அசல் பதிவுகள் தரப்படவில்லை’ என, தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அயோத்தியைச் சேர்ந்த’, ஹாஜி மகமூத் அகமது, சையது அக்லக் அகமது ஆகியோர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற விசாரணையில் தாங்கள் சாட்சியம் அளித்ததாகவும், பாபர் மசூதி இடிப்பின் போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்த மனு, 11ம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், தள்ளி வைக்கும்படி மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை, 18ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சிங் தலைமையிலான அமர்வு முன், மனு மீதான விசாரணை துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement