புதுடெல்லி: அரிசி, கோதுமை, பருப்பு போன்வற்றை 25 கிலோவுக்கு மேல் வாங்கினால் ஜிஎஸ்டி வராது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிதிப்புக்குள் வராத பல பொருட்களுக்கு புதிதாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது. குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்களான பால், தயிர், பனீர், மோர், லஸ்ஸி, அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.இந்த புதியவரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.இந்நிலையில், ஒன்றிய மறைமுக வரிகள் நேரடி வாரியம் நேற்று அளித்துள்ள விளக்கத்தில், ‘முன்பு, பதிவு செய்யப்பட்ட பிராண்டட் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ப்ரீ பேக்கிங் மற்றும் லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து பொருட்களும் 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு உட்பட்ட குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதுவே 25 கிலோவுக்கு அதிகமான அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதே சமயம், நுகர்வோர்கள் தலா 10 கிலோ என 3 பேக்கிங் உணவுப் பொருளை வாங்கினால் அதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். ஒரே மூட்டை 25 கிலோவுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி வராது’ என கூறப்பட்டுள்ளது.