“மாணவர்களின் பாதுகாப்புக்காக சின்னசேலம் தனியார் பள்ளியை அரசு ஏற்க வேண்டும்” – முத்தரசன்

சென்னை: “சின்னசேலம் தனியார் பள்ளியை அரசு ஏற்பது மாணவர்கள் பாதுகாப்புக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அவசியமாகும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 2 பயின்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 13.02.2022ஆம் தேதி மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பள்ளியில் இதேபோன்று மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை கருத்தில் கொண்டு காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். மாணவிகளுக்கு பாதுகாப்பாற்ற பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அவ்வப்போது பள்ளியின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது.

உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் மாணவி சாவில் ஆழ்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அரசு தரப்பினர் முயன்ற நிலையில் பொதுமக்களை ஆத்திரமூட்டியது எது என்பது குறித்தும் அரசு விசாரித்து வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து சந்தேக மரணங்கள் ஏற்படும் பள்ளியை அரசு இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு அணுகியிருக்க வேண்டும்.

இப்போது ஆத்திரமூட்டப்பட்ட மக்களால் ஏற்பட்ட நிகழ்வை, வன்முறை மற்றும் கலகமாக சித்தரிப்பதும், பொது மக்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குகளை பதிவுசெய்து, எல்லையற்று கைது செய்து வருவதும் சட்டம் – ஒழுங்கு அமைதிக்கு வலு சேர்க்காது. மாணவியின் சாவு குறித்த சம்பவம் குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த தனியார் பள்ளியை அரசு ஏற்பது மாணவர்கள் பாதுகாப்புக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அவசியமாகும். இது தொடர்பாக தனியார் பள்ளி அமைப்புகளின் மிரட்டலுக்கு அரசு இடம் தரக்கூடாது. குற்றச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு எதிர்காலத்தில் குற்றச் சம்பவம் நிகழாமல் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.