பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி பட்டப்பகலில் காரில் வந்த மர்ம கும்பலால் சரமாரியாக சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் என்று கனடாவில் இருக்கும் கோல்டி பிரர் ஃபேஸ்புக் மூலம் அறிவிப்பு கொடுத்தார். தன்னுடைய சகோதரனின் கொலைக்கு பழிவாங்கவே இக்காரியத்தை செய்ததாகவும் தெரிவித்தார்.
கொலை நடந்து 40 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தக் கொலையை கோல்டி பிரர் எவ்வாறு தன்னுடைய ஆட்களைக்கொண்டு செய்து முடித்தார் என்பது குறித்து போலீஸார் தெரிவித்துள்ளனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாள், அதாவது மே 28-ம் தேதி கோல்டி பிரர் ஹரியானாவில் இருக்கும் தனது கூட்டாளி பிரியவ்ரத் ஃபௌஜி என்பவரை காலை 11 மணிக்குத் தொடர்புகொண்டு, `பாடகர் சித்துவின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. உடனடியாக நாளையே அவரை கொலைசெய்ய வேண்டும்’ என்று பிரியவ்ரத் ஃபௌஜித்திடம் தெரிவித்தார். பெளஜித்தும் ஆட்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். 29-ம் தேதி காலை 10 மணிக்கு பிரியவ்ரத் ஃபௌஜியும், அங்கித், கேசவ் ஆகியோரும் ஹரியானாவின் ஹிசர் மாவட்டத்திலுள்ள ஹிர்மாரா என்ற இடத்திலிருந்து பொலைரோ காரில் பாடகரின் மன்சா கிராமத்துக்குப் புறப்பட்டனர்.
போகும்போது வழியில் தீபக், காசிஷ் ஆகியோரையும் காரில் ஏற்றிக்கொண்டனர். கோல்டி, கொலைகாரர்களைத் தொடர்புகொண்டு மன்சா கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓர் உணவகத்தில் நிற்கும்படி கேட்டுக்கொண்டார். கோல்டியின் உத்தரவின்பேரில் அங்கு மன்பிரீத் சிங், ஜெக்ரூப் சிங் ஆகியோரும் கொலையாளிகளுடன் சேர்ந்துகொண்டனர். சரியாக மாலை 4:30 மணிக்கு கோல்டி பிரர் கொலையாளிகளைத் தொடர்புகொண்டு, `பாடகர் வீட்டிலிருந்து புறப்படப்போகிறார். நீங்கள் உடனே மன்சா கிராமத்துக்குச் செல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.
கொலையாளிகள் மன்சா கிராமத்தை அடைந்த பிறகு கோல்டி பிரர் மீண்டும் அவர்களைத் தொடர்புகொண்டு பாடகர் பாதுகாப்பு இல்லாமல் கறுப்பு நிற காரில் செல்வதாகத் தகவல் கொடுத்தார். கொலையாளிகள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பாடகர் காரின் வருகைக்காகக் காத்திருந்தனர். பாடகரின் கார் கொலையாளிகளின் காரைக் கடந்து சென்றவுடன் இரண்டு கார்களில் அவரின் காரைப் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பாடகரின் காரின் நான்கு பக்கமும் நின்றுகொண்டு சுட்டனர். பின்னர் பாடகர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்துகொண்டு கொலையாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பினர்.
அவர்கள் உடனே கொலை குறித்து கோல்டி பிரருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்களிடம் ஹரியானாவின் பதேஹாபாத் மாவட்டத்தில் பதுங்கியிருக்கும்படி கோல்டி பிரர் கேட்டுக்கொண்டார். கொலையாளிகள் மே 31-ம் தேதி ஹரியானாவின் பிவானி மாவட்டத்துக்கு வந்தனர். அங்கிருந்து ஜூன் 2-ம் தேதி குஜராத்தின் முந்த்ராவுக்கு வந்து சேர்ந்தனர். குஜராத் வரும்போது பல இடங்களில் கார், உடைகள் போன்றவற்றை மாற்றிக்கொண்டே வந்தனர். ஜூன் 20-ம் தேதி தீவிரத் தேடுதலுக்குப் பிறகு பிரியவ்ரத் ஃபௌஜி, காசிஷ் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
மன்பிரீத் சிங், ஜெக்ரூப் சிங் ஆகியோர் இன்னும் தலைமறைவாகத்தான் இருக்கின்றனர். இதற்கிடையே கோல்டி பிரரின் ஏற்பாட்டில் சச்சின் பிஸ்னோய்தான் கொலையாளிகளுக்குத் தேவையான தங்குமிடம், பணம், வாகன வசதியைச் செய்து கொடுத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு திலக் ராஜ் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு கொலைக்கு முன்பு ஏப்ரல் 21-ம் தேதியே வெளிநாட்டுக்கு சச்சின் தப்பிச்சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.