புதுடெல்லி: சிங்கப்பூர் செல்லும் விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசால் கொண்டுவரப்பட்ட ‘டெல்லி மாடல்’ பல்வேறு பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் கெஜ்ரிவாலை சந்தித்த சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வோங் இத்திட்டத்தை வெகுவாக பாராட்டியதுடன், சிங்கப்பூரில் ஆகஸ்ட்டில் நடக்கும் உலக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் சிங்கப்பூர் செல்ல மத்திய அரசின் அனுமதி வேண்டி கெஜ்ரிவால் தரப்பு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய அரசு தரப்பில் கடிதத்துக்கு பதில் கிடைக்காத நிலையில், கெஜ்ரிவால் கடுமையாக சாடியுள்ளார். அதில், “நான் குற்றவாளியல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். எனினும், ஏன் சிங்கப்பூர் செல்ல எனக்கு தடை விதிக்கப்படுகிறது என்பது புரியவில்லை. எனது சிங்கப்பூர் பயணம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம். எங்களைப் பொறுத்தவரை நமது நாட்டில் நிலவும் வேறுபாடுகள், வெளியே குறிப்பாக உலக அரங்கில் பிரதிபலிக்க கூடாது என்பதே நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.