சின்னசேலம் கலவரம்: 8 பிரிவுகளில் வழக்கு… 128 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரண விவகாரத்தில், நீதி கேட்டு நடந்த போராட்டம் நேற்று (17.07.2022) வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தில், மாணவி படித்த தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். பள்ளிக் கட்டடம், அங்கிருந்த பள்ளிப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வக்குமார் மற்றும் 52 காவலர்கள் காயமடைந்தனர். மேலும், இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்றைய தினம் தகவல் தெரிவித்திருந்தார்.

கலவரம்

இந்த நிலையில், கணியாமூர் தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 128 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 20 பேர் சிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தக் கைது நடவடிக்கை, கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டிருக்கின்றனவாம். அதன் மூலமாக, வன்முறையில் ஈடுபட்டவர்களை அறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், இந்தக் கலவரத்தில் கைதுசெய்யப்பட்ட 128 பேரும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றப் பொறுப்பு நீதிபதி முகமது அலி முன் ஆஜர்படுத்தப்பட்டிருக்கின்றனர். தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக இன்று ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம்‌ அறிவித்திருக்கிறது. இதனால், இன்று இந்த ஒரு வழக்கு மட்டுமே நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பள்ளி பேருந்துகள்

இதுவரை கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 128 பேர்‌ மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 147 PDPP, 148, 294(B), 323, 324, 506 II, 363, 332 உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.