புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் தனியார் முதலீடு ஏன்? என மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர். பகவத் கிருஷ்ணராவ் கராட் திங்கள்கிழமை விளக்கம் அளித்தார். திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதில் அளிக்கையில் இதனை தெரிவித்தார்.
தென்சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், “பொதுத்துறை வங்கிகள் 2023-2024-க்குள் மேலும் இணைக்கப்படுமா? அல்லது அதற்கு தனியார் முதலீடு பெறப்படுகிறதா? அதற்கான காரணம் மற்றும் வங்கி எண்ணிக்கை, செயல்பாடு, வங்கிகளில் தமிழ் மொழிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பகவத் கிருஷ்ணராவ் கராட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் வருமாறு: நிதியமைச்சர், 2021-22 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையில், 2 பொதுத்துறை வங்கிகளின் தனியார்மயமாக்கலையும், மூலோபாயக் கொள்கையின் ஒப்புதலையும் எடுத்துக் கொள்ளும் அரசாங்கத்தின் நோக்கத்தை அறிவித்தார்.
ஆத்மநிர்பர் பாரதத்துக்கான புதிய பொதுத்துறை நிறுவன கொள்கையின் படி, தனியார் மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைகளுக்கு பங்களிப்பு மற்றும் சமூகத்துறை மற்றும் அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்க முடியும்.
தமிழகத்தில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, 2022, மார்ச் 31, நிலவரப்படி, மொத்த கிளைகளின் எண்ணிக்கை 6,235. கிராமப்புறங்களில் 1,871, நகர்ப்புறங்களில் 8,86, பிற பகுதிகளில் 3,478 உள்ளன.
சாதாரண மக்களுக்கு தரமான வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு வங்கிக் கிளை அல்லது வர்த்தக தொடர்பாளர் மூலம் வங்கிச் சேவை தரப்படுகிறது. ‘தர்ஷ்க்’ செயலி மூலம் 99.97 சதவீத மக்கள் கவரப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த செயலி, புதிய வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. கடன் மேலாண்மை அமைப்புகள் கடன் வழங்குதலில் திறம்பட செயலாற்றுகின்றன. வங்கி ஊழியர்கள், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தகவல் தொடர்பு திறன்களைக் கற்றுக் கொள்வதற்காக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வங்கிச் சேவைகளுக்கான அணுகலைச் செயல்படுத்த மொழி ஒரு தடையாக இல்லை என்பதை வங்கிகள் உறுதிப்படுத்துகின்றன. ஆங்கிலம், இந்தி மற்றும் கூடுதலாக தமிழில் தகவல் பலகைகளை காட்சிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சேவை மற்றும் வசதிகள் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய சிறு புத்தகங்களை தமிழில் கிடைக்கச் செய்தல், கணக்கு திறக்கும் படிவங்கள், பாஸ் புத்தகங்கள் போன்ற வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டிய அனைத்து அச்சிடப்பட்ட பொருட்களையும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஏ.டி.எம்களில் தமிழ் பயன்பாடுகள் கிடைக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.