டென்வர்: அமெரிக்காவில் தனது சம்பளத்தை டிக்டாக் வீடியோவில் வெளிப்படுத்தியதற்காக பெண் ஒருவர் வேலையை இழந்துள்ளார்.
அமெரிக்காவின் டென்வரைச் சேர்ந்த லெக்ஸி லார்சன் என்பவர் தான் வேலையை இழந்த அந்தப் பெண். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த லார்சன் இதற்கு முன் அக்கவுண்ட்ஸ் தொடர்பான பணிகளை செய்துவந்துள்ளார். சில நாட்கள் முன் அவருக்கு தொழில்நுட்ப பிரிவில் பணி கிடைத்துள்ளது. இதற்காக சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலைபார்த்த போது 70,000 டாலர் சம்பளம் பெற்ற லார்சன் தொழில்நுட்ப பணிக்கு மாறியபோது 90,000 டாலர் வரை ஊதிய உயர்வு பெற்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தனக்கு எப்படி அந்த வேலை கிடைத்தது என்பதை விவரித்து டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரின் முதலாளி கண்ணில்பட இப்போது வேலையை இழந்துள்ளார். அமெரிக்க தேசிய தொழிலாளர் உறவுகள் சட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் தங்கள் சம்பளத்தைப் பற்றி பேச அனுமதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஊதிய விவாதத்தை தடை செய்யும் கொள்கைகள் சட்டவிரோதமானது என்றும் கூறப்படுகிறது.
எனினும், சில நிறுவனங்கள் சில கொள்கைகளை கடைபிடிக்கின்றன. அதாவது, ஊழியர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான லோகோ மற்றும் பொருட்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. வர்த்தக ரகசியங்களை வெளிப்படுத்தக்கூடாது என்பதற்காக இந்தக் கொள்கைகளை கடைபிடிக்கின்றன. அந்த அடிப்படையில் லார்சன் தனது பணியை இழந்திருப்பார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, தனது பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்ற படியேற இருப்பதாக லார்சன் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பேசுபொருளாக மாறியுள்ளது.