புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடந்த தேர்தலில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவை செயலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 31 இடங்களில் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவை மீறியதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 8-வது பிரிவின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு சட்டபேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவையில் உள்ள 5 காலியிடம், மாநில சட்டப்பேரவையில் உள்ள 6 காலியிங்கள் தவிர்த்து மொத்தம் 4,796 பேர் (771 எம்பிகள் மற்றும் 4,025 எம்எல்ஏக்கள்) வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு மையத்தில் வாக்களித்தனர். மாநிலங்களில் அந்தந்த சட்டப்பேரவையில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு மையத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இதில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையிலும், 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்ற மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்திலும் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.