புதுடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு தடை கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் சமீபகாலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக நிறைய இடங்களில் தரை இறங்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கறிஞர் ராகுல் பரத்வாஜ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இத்தகைய தொழில்நுட்ப கோளாறுகள் ஏராளமான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. எனவே ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஆகியவை நிறுவனம் தொடர்பான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக ஆய்வு செய்து முடிக்கும் வரையில் அந்நிறுவனத்தின் விமானங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். மனுவை பிரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு, ‘‘ஸ்பைஸ்ஜெட் விமான விவகாரத்தை பொருத்தவரையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தான் நடவடிக்கை எடுக்கக்கூடிய சுதந்திரமான அமைப்பாகும். அதனால் இதனை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்’’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.