வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லாகூர் : பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இடைத்தேர்தலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பாக்.,கில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
நம் அண்டை நாடான பாக்.,கில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் தலைமையிலான கூட்டணி, 15 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், இக்கூட்டணிக்கு பஞ்சாப் சட்டசபையில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
இதன் காரணமாக, பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரிப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ், பஞ்சாப் மாகாண முதல்வர் பதவியை இழந்துள்ளார். புதிய முதல்வராக, தெஹ்ரீக் – இ – இன்சாப் கூட்டணியைச் சேர்ந்த சவுத்தி பர்வேஸ் இலாஹி பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றிக்கு மக்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள இம்ரான் கான், ”உடனடியாக ஷாபாஸ் ஷெரிப் பதவி விலகி, நியாயமான, நம்பிக்கைக்குரிய தேர்தல் ஆணையத்தின் கீழ், பாக்.,கில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப் கட்சி, இம்ரான் கான் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். எதிர்க்கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணி அரசு சார்பில், பிரதமராக ஷாபாஸ் ஷெரிப் பதவியேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement