Inflight protest against Pinarayi Vijayan: E P Jayarajan criticises IndiGo for slapping travel ban: சி.பி.ஐ(எம்) மூத்த தலைவரும் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.ஜெயராஜன் திங்களன்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு மோசமான மற்றும் தரமற்ற விமான நிறுவனம், அவர்களின் விமானத்தில் பயணிப்பதை விட நான் நடந்து செல்வதையே விரும்புவேன், என்று கூறினார்.
இண்டிகோவிற்கு எதிரான மூத்த சி.பி.ஐ(எம்) தலைவரான ஜெயராஜனின் சர்ச்சைக்குரிய கருத்து, கடந்த மாதம் விமானத்தில் அவர் முறையற்ற வகையில் நடந்து கொண்டதன் தொடர்ச்சியாக, அடுத்த மூன்று வாரங்களுக்கு தங்கள் விமானங்களில் பறக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் தடை விதித்ததை அடுத்து வந்தது.
இதையும் படியுங்கள்: எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர்; யார் இந்த மார்கரெட் ஆல்வா?
கடந்த ஜூன் 14ஆம் தேதி கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது தொடர்பான சம்பவம் இது. திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கியதும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். பினராயி விஜயனுடன் பயணித்த ஜெயராஜன், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தள்ளிவிட்டார், பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர். விமான நிறுவனங்கள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்துள்ளன.
ஜெயராஜன் மற்றும் இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ஃபர்சீன் மஜீத் மற்றும் நவீன் குமார் ஆகியோர் மீது கட்டுக்கடங்காத பயணிகள் தொடர்பான டி.ஜி.சி.ஏ விதிகளின் கீழ் அமைக்கப்பட்ட விமான நிறுவனத்தின் உள் குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இண்டிகோ ஏர்லைன்ஸைத் தாக்கி, “நான் யார் என்று அவர்களுக்கு (விமான நிறுவனங்களுக்கு) தெரியாது என்று நினைக்கிறேன். குற்றவாளிகள் தங்கள் விமானத்தில் பயணிப்பதை விமான நிறுவனங்களால் தடுக்க முடியவில்லை. உண்மையில், குற்றவாளிகளை (இளைஞர் காங்கிராஸார்) தடுத்ததற்காக அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்திருக்க வேண்டும். என் மீதான தடை சிவில் விமான போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது. நான் ஒருபோதும் இண்டிகோ விமானங்களில் பறக்க மாட்டேன். அது ஒரு அழுக்கு நிறுவனம்.. தரமற்ற நிறுவனம். என்ன வந்தாலும், நான் இண்டிகோ விமானங்களில் பயணிக்க மாட்டேன். இண்டிகோ விமானங்கள் சிக்கலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகைய கார்ப்பரேட் நிறுவனத்தின் கணக்குகளுக்கு என் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட போகாமல் பார்த்துக் கொள்கிறேன். இண்டிகோவில் பறப்பதை விட நான் நடந்து செல்வதையே விரும்புவேன்,” என்று ஜெயராஜன் கூறினார்.
இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம் கேரளாவில் காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தொடர் தாக்குதல்களை ஏற்படுத்த வழிவகுத்தது. ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்த நிலையில், சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினரான ஜெயராஜன் மீதான புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.