புதுடில்லி: கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த, இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில், 2020 மே மாதம் சீனப் படைகள் குவிக்கப்பட்டன. நம் படைகளும் குவிக்கப்பட்டதால், போர் மூளும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்புக்கு இடையே இரண்டு முறை மோதலும் ஏற்பட்டது.எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்வது குறித்து ராணுவ மற்றும் தூதரக ரீதியில் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டது. இதில் சில இடங்களில் இருந்து படைகள் விலக்கி கொள்ளப்பட்டன.
எல்லையில் இருந்து முழுமையாக படைகளை விலக்கி கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அளவிலான, 16வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து, 12 மணி நேரம் நடந்த பேச்சுக்குப் பிறகு, நேற்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே, இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவு மேம்படும் என்பதை, இரு நாடுகளும் உணர்ந்துள்ளன.
கிழக்கு லடாக் எல்லையில் தற்போதுள்ள பிரச்னைகளுக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளக் கூடிய தீர்வு காணப்பட வேண்டும். இது தொடர்பாக விரிவாக பேச்சு நடத்தப்பட வேண்டும்.ராணுவ மற்றும் தூதரக ரீதியில் இதற்கான பேச்சு விரைவில் நடைபெறும். அதுவரை, தற்காலிகமாக எல்லையில் இரு நாடுகளும் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement