புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும்’ என கடந்த ஜூன் மாதம் கர்நாடகா அரசு கடிதம் அனுப்பியது. அதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அனுமதி வழங்கியது. இத்தகைய நிலைப்பாடு உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவுகளுக்கு எதிரானது எனக்கூறி ஜூன் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி கன்வீல்கர் அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி ஆணையத்தின் கூட்டம் 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஆணையத்தின் 16வது கூட்டம் வரும் 22ம் தேதி நடக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது மேகதாது குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது எனவும் தமிழக அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும். அதனையும் மீறி காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கும் பட்சத்தில் தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் கூட்டத்தை புறக்கனித்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளன.