மும்பை: மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய முயற்சிகளை எப்போதும் பாராட்டத் தவறுவதில்லை. சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பதிவில் புதுமையாக வடிவமைக்கப்பட்ட மாடிப் படிக்கட்டு குறித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுவரில் பதிக்கப்பட்டுள்ள மெட்டாலிக் கிரில் பகுதியில் உள்ள லாட்ச்சை ஒருவர் திறக்கும் போது படிக்கட்டாக மாறுகிறது. அதில் அவர் ஏறி முதல் தளம் செல்கிறார். திரும்பவும் அதில் கீழே வந்து, முன்பு போலவே சுவரை ஒட்டி தாழிடுகிறார். மிகவும் எளிமையான அதே சமயம் மிகச் சிறப்பாக இந்த படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்கான்டனேவியன் வடிவமைப்பாளர்களும் பொறாமைப்படும் அளவுக்கு இது உருவாக்கப்பட்டுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் அவர் பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 50 ஆயிரம் பேர் இதை பெரிதும் ரசித்து பாராட்டியுள்ளனர். இதேபோல மற்றொரு பதிவில் அவர் 2 பெண்கள் வழக்கமான முறையில் துணிகளை கயிறு கட்டி உலர்த்தும் நுட்பத்தை பதிவு செய்துள்ளார். சூரிய ஆற்றல் மற்றும் காற்றின் ஆற்றலுக்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை 9,000 பேர் பாராட்டிகருத்து பதிவு செய்துள்ளனர்.