ஹைதராபாத்: கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு செயற்கை மழை மூலம் வெளிநாட்டினரின் சதியாக இருக்கலாம் என தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. பல அணைகள் நிரம்பி, அதன் கொள்ளளவை எட்டியதால், மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதற்காக முன்கூட்டியே அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக பத்ராசலம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல கிராமங்கள் நீரில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நேற்றும் சில இடங்களில் இப்பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முலுகு, ராமண்ண கூடம், பத்ராச்சலம் பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பத்ராச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வெள்ளத்தால் பத்ராச்சலம் உட்பட இதன் சுற்றுப்பகுதிகளில் சேதம் ஏற்படாமல் இருக்க நிரந்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோதாவரியால் வீடுகள் இழப்போருக்கு ரூ.1000 கோடியில் குடியிருப்பு பகுதிகள் கட்டித்தரப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும். மேலும், குடும்பத்துக்கு தலா 20 கிலோ அரிசி தொடர்ந்து 3 மாதங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.
ஆனால், இந்த வெள்ளம் வெளிநாட்டு சதியோ என எண்ண தோன்றுகிறது. லடாக், உத்தரா கண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ‘க்ளவுட் பர்ஸ்ட்’ மூலம் செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. இதேபோன்று வெளிநாட்டினர் கோதாவரியில் செயற்கை மழைபெய்வித்து சதி செயலில் ஈடுபட்டனரோ என நினைக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் சந்திரசேகரராவின் இந்த பேச்சை பாஜக, காங்கிரஸார் தீவிரமாக கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சசிதர்ரெட்டி பேசுகையில், முதல்வர் சந்திரசேகர ராவுக்கு மழை எப்படி பெய்கிறது என்பதுகூட தெரியவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.