10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை| Dinamalar

10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை

கடப்பாக்கம் ; செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே, விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், 66; இவரது மனைவி தேவகி, 60. நேற்று முன்தினம் இரவு, தம்பதி, வீட்டில் உறங்கியுள்ளனர். நேற்று காலை, 6:00 மணிக்கு மனைவியை காணவில்லை என, சுப்பிரமணியன் தேடினார்.

அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள அறையில், தலையில் கோணிப்பை மூடிய நிலையில், கை, கால்கள் கட்டப்பட்டு, தேவகி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.காலை 5:30க்கு, மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்ற தேவகியின் தலையில் கோணிப்பையை சுற்றி கை, கால்களை கட்டி, கல்லால் தாக்கி கொலை செய்து, அவரது கழுத்தில் இருந்த, 10 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

தேங்காய் திருட இடையூறுவீட்டை சேதப்படுத்தியவர் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே தென்னந்தோப்பில் தேங்காய் திருடுவதற்கு இடையூறாக தோப்பில் தங்கியிருந்த மூதாட்டி சுந்தரியை தாக்கி வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலாந்தரவை அம்மன்கோவில் தெரு ராமச்சந்திரன் மகன் கார்மேகம் 24, அதே பகுதி 18 வயது சிறுவன் இருவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை- சாத்தான்குளம் ரோட்டில் இருந்து சற்று தொலைவில் ஜமால் முகமது என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.

இவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் தென்னந்தோப்பில் அடிக்கடி தேங்காய் திருட்டு போனது.இதையடுத்து 11 மாதங்களுக்கு முன் திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு பகுதியை சேர்ந்த மாரிமுத்து 65, அவரது மனைவி சுந்தரி 60, ஆகியோரை தோப்பில் கொட்டகை அமைத்து காவலுக்கு தங்கினர். அங்கு வேலை செய்து வந்தனர்.அடிக்கடி தேங்காய் திருட வருவோர் இவர்கள் சத்தம் போட்டதும் ஓடிவிடுவார்கள். நேற்று முன்தினம் இரவு கார்மேகம் மற்றும் சிறுவன் இருவரும் தேங்காய் திருட வந்தனர். அவர்களை சுந்தரி சத்தம் போட்டார். ஆத்திரம் அடைந்த இருவரும் சுந்தரியை அசிங்கமாக பேசி தாக்கினர்.மேலும், வீட்டின் கதவை சேதப்படுத்தியவர்கள். இனி இங்கே தங்கி இருந்தால் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிடுவோம், என கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். கேணிக்கரை எஸ்.ஐ.,முத்துராமு வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தார்

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்

பெரிய பட்டினம்: இலங்காமணியை சேர்ந்தவர் கலைமணி மகன் ரீகன் 36. பா.ஜ., ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர். இவர் நேற்று முன்தினம் பெரியபட்டினத்தில் நடந்த சந்தனக்கூடு விழாவிற்கு மனைவியுடன் சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த நபர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி தப்பி விட்டார். ரத்த காயத்துடன் ரீகன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஹோட்டலில் காதலர்கள் உல்லாசம்வீடியோ எடுத்து மிரட்டிய ஜோடி கைது

latest tamil news

பாகலுார் ; ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து காதல் ஜோடியின் உல்லாசத்தை படம் பிடித்து மிரட்டிய மற்றொரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு எலஹங்காவில் உள்ள ஹோட்டலுக்கு, சில நாட்களுக்கு முன், ஒரு காதல் ஜோடி சென்று, அறை எடுத்து தங்கி இருந்தனர். இதுபோன்று இரண்டு முறை அறை எடுத்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.சில நாட்களில், இவர்களில் பெண்ணின், ‘வாட்ஸ் ஆப்’புக்கு ஒரு வீடியோ வந்தது. அதில், காதலனுடன் அவர் நெருக்கமாக இருந்த காட்சிகள் இருந்தன. சில நிமிடங்களில், மொபைல் போனில் அழைத்த பெண் ஒருவர், ‘வீடியோவை பார்த்தீர்களா; இதை பலருக்கும் அனுப்புவேன். அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் 25 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என மிரட்டினார்.தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என காதலி கூறினார். இதனால் கோபமடைந்த மொபைலில் பேசிய பெண், பயங்கரமாக மிரட்டினார். அதிர்ச்சி அடைந்த காதலி, பாகலுார் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிந்து போலீசார் விசாரித்தனர்.இதில், மிரட்டல் விடுத்தது உஷா, 35, மற்றும் சுரேஷ் பாபு, 30 என்பது தெரியவந்தது. இவர்களும் காதலர்களே. இவர்கள் இருவரும், சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையில் ஏற்கனவே தங்கி இருந்தனர். அப்போது ரகசிய கேமரா பொருத்தி விட்டு சென்றுள்ளனர். அடிக்கடி இந்த ஹோட்டலுக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதுபோல் மேலும் பலரை மிரட்டி இருக்கலாம் என கருதப்படுகிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

போதை காளான் விற்ற 6 பேர் கைது

கொடைக்கானல், ; கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மலைப்பகுதியில் போதைக்காளான்களை விற்ற பூண்டி சத்யராஜ் 30, மன்னவனுார் வைரவேல் 30, லட்சுமணன் 38, மதன்குமார் 24, கேரள மாநிலம் சரத்குமார் 60, கவுஞ்சி குணசேகரன் 52, ஆகியோரை போலீசார் கைது செய்து போதை காளான்கள், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். கொடைக்கானலில் தலை தூக்கி உள்ள இப்பிரச்னையில் இதற்கு முன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலை பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு போதை காளான் விற்பனையை முழுமையாக தடை செய்யவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சொத்து தகராறில் விவசாயிகட்டையால் அடித்து கொலை; சகலை மகன் வெறிச்செயல்

வேடசந்தூர் ; வேடசந்துார் ஒன்றியம் மல்வார்பட்டி ஊராட்சி எஸ்.ஒத்தையூரில் சொத்து தகராறில் விவசாயி ஆரோக்கியசாமியை 62, கட்டையால் அடித்து கொலை செய்த சகலை செபஸ்தியார் மகன் பிரவீன் குமாரை 28, போலீசார் கைது செய்தனர்.ஆரோக்கியசாமிக்கு மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். செபஸ்தியார் மகன் பிரவீன்குமார் மாரம்பாடி ஊராட்சி பெரியகுளத்துப்பட்டியில் வசிக்கிறார்.ஆரோக்கியசாமிக்கு சொந்தமான நிலம் 4.53 ஏக்கர் மாரம்பாடி ஊராட்சியில் உள்ளது.

இந்த நிலத்தை மாரம்பாடியை சேர்ந்த ஒருவருக்கு ஏக்கர் ரூ.6 லட்சம் வீதம் விற்றார். முன்பணம் ரூ.ஆயிரம், பிறகு ரூ.50 ஆயிரமும் பெற்றார். நிலத்திலிருந்து கிணற்று மின் மோட்டாரை ஆரோக்கியசாமி எடுத்துள்ளார். நிலத்தை வாங்கியவர் இதனால் நிலம் வேண்டாம் என தெரிவித்தார். இதனால் ஆரோக்கியசாமி வாங்கிய ரூ.51 ஆயிரத்தை பொதுநபர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பியதுடன் வேறு ஒருவருக்கு நிலத்தை விற்க முயன்றார்.இதுகுறித்து பிரவீன் குமார் ஆரோக்கியசாமி வீட்டுக்கு சென்று முதலில் விற்றவரிடம் நிலத்தை வழங்க கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட ஆத்திரமுற்ற பிரவீன்குமார் கட்டையால் தாக்கியதில் ஆரோக்கியசாமி சம்பவயிடத்தில் இறந்தார். டி.எஸ்.பி., மகேஷ் மற்றும் போலீசார் விசாரித்து பிரவீன் குமாரை கைது செய்தனர்.

துப்பாக்கி முனையில்பஸ் ஓட்டுனருக்கு மிரட்டல்

அமைந்தக்கரை ; கொளத்துார், வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தர், 57; பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர்.இவர் நேற்று மாலை, அண்ணா நகரில் இருந்து அமைந்தகரை நோக்கி காரில் சென்றார். சித்த மருத்துவமனை அருகே கார் செல்லும்போது, அம்பத்துாரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து ஓட்டுனர் முருகேஷ், 45, சோமசுந்தரின் காருக்கு வழிவிடவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால், சோமசுந்தருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

காரை விட்டு கீழே இறங்கிய சோமசுந்தர், அவருடன் வந்த குபேந்திரன், 38, ஆகியோர், முருகேஷிடம், 45, வாய்த் தகராறில் செய்தனர்.மேலும் தங்களிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, பட்டாக் கத்தியால் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து வந்த அமைந்தகரை போலீசார், சோமசுந்தர், குபேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். துப்பாக்கி, பட்டாக்கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர்.இருவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மனைவி குறித்து அவதுாறு; மூவரை சுட்டுக் கொன்ற போலீஸ்

புதுடில்லி : புதுடில்லியில், தன் மனைவி குறித்து அவதூறாக பேசிய சக ஊழியர்கள் மூவரை போலீஸ் ஒருவர், நேற்று சுட்டுக் கொன்றார். புதுடில்லியின் ஹைதர்பூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிபவர் பிரபின் ராய். வடகிழக்கு மாநிலமான சிக்கிமைச் சேர்ந்த இவருடன், அதே மாநிலத்தைச் சேர்ந்த நம்கியால் பூட்டியா, இந்திரலால் சேத்ரி, தன்ஹாங் சுப்பா ஆகிய மூன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பிரபின் ராய்க்கும், மற்ற மூவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆத்திரமடைந்த பிரபின், அவர்கள் மூவரையும் சுட்டுக் கொன்றார். இது குறித்து, போலீஸ் துணை ஆணையர் பிரணவ் தயல் கூறியதாவது:துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குச் சென்றபோது, இரண்டு போலீசார் உயிரிழந்தது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த இன்னொரு போலீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்துக்குப் பின் பிரபின், அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில், தன் மனைவி குறித்து மூவரும் அவதுாறாகப் பேசியதாகவும், அதனால் மன உளைச்சலில், அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.