கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், டில்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளை, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படுமென, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், நேற்று தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது.
கூடுதல் தலைமைச் செயலாளரும் தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையருமான அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி இருவரும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தின் பண்பாட்டை உணர்த்தும் வகையில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.தமிழ்நாடு இல்லத்தில் பயின்றுவரும் மாணவிகளின் பதரநாட்டியமும், தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றத்தின் சார்பாக, கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழக அரசின் நில அளவை துறையின் சார்பில், சென்னை குறித்த வரைபட கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.இவைதவிர, மதியம் 1:30 மணிக்கு, சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படமும், மாலை 5:30 க்கு, உலக அளவில் வசூலைக் குவித்த விக்ரம் திரைப்படமும் திரையிடப்பட்டன.தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு இரு தமிழ்நாடு இல்லங்களும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
– நமது டில்லி நிருபர்-
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement