ஜிஎஸ்டியில் பெட்ரோல் கொண்டு வரப்படுமா?

நாடாளுமன்றத்தில் நேற்று எம்பிக்கள் கேட்ட கேள்விகள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அளித்த பதில்களில் சில: மக்களவையில் ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2021-22ம் ஆண்டில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அருணாச்சல், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 16 மாநிலங்களில் 532 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்து உள்ளனர்.  அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் மட்டும் 112 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த உள்ளனர்’ என கூறி உள்ளார். மக்களவையில் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் விதி எண் 377ன் கீழ் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில், ‘சேலம் மாவட்டம் முழுவதும் ஈ.எஸ்.ஐ சலுகை திட்டத்தை விரிவுபடுத்தும் பணியை உடனே செயல்படுத்திட வேண்டும்’ என கூறினார்.  மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் எழுப்பிய கேள்வியில், ‘2023-24ம் ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் அல்லது பங்கு விலக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா?. அப்படியென்றால் அதன் விவரங்கள், தமிழகத்தில் உள்ள நகர்புற மற்றும் கிராமங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு தமிழ் மொழியை வங்கியில் பயன்படுத்த எடுக்கப்பட்ட நடைமுறை என்ன’ என்று கேட்டிருந்தார். இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘தமிழகத்தை பொருத்தமட்டில் அனைத்து வங்கிகளிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை போன்றே தமிழ் மொழியும் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும். கணக்கு புத்தகம், நிரப்பப்படும் படிவங்கள், வாடிக்கையாளர்கள் குறைகள் தீர்ப்பது, என மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஏ.டி.எம்களிலும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பங்களுக்கு ஏற்றவாறு தமிழ் மொழியை பயன்படுத்தலாம். அதுகுறித்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.ஒன்றிய வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில், ‘காய்ந்த இலைகள், மரக்கிளைகள் மற்றும் பைன் மரக்காடுகளின் காய்ந்த இலைகள் ஆகியவற்றினால் ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகம் உட்பட 36 மாநிலங்களில் 2.23 லட்சம் காட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்தார். மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு, ‘ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் பெட்ரோல் டீசலை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு திட்டம் வைத்துள்ளதா?’ என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில், ‘பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வருவதற்கு ஜி.எஸ்.டி  கவுன்சில் இதுவரை ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்திற்கு எந்த பரிந்துரையும் வழங்கவில்லை. அதற்கான காரணம் இதுவரை எந்த மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்யவில்லை’ என தெரிவித்துள்ளார்.* கிரிப்டோ கரன்சி தடை ரிசர்வ் வங்கி பரிந்துரைகிரிப்டோ கரன்சி தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி. திருமாவளவன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது. கிரிப்டோ கரன்சியை உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் தடை செய்ய ஒன்றிய அரசு விரும்புகிறது. இந்தியாவில் மட்டும் தடை செய்தால் முழுமையான பலன் கிடைக்காது,’’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.