ஸ்ரீமதியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரையும் சேர்க்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.
கள்ளகுறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் இதற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள், மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்று கிழமை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளிக்கு சொந்தமான பேருந்துகள் தீவைக்கப்பட்டன. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சமந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்தார்.
மேலும் கலவரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர், மோகன் அமர்வு முன்பு மாணவியின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் சங்கர் சுப்பு, மறுபிரேத பரிசோதனை நடத்தும்போது எங்கள் தரப்பில் உள்ள மருத்துவர் இருக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதுபோன்ற குற்றவியல் விவகாரங்களில் தலையிட சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு அதிகார வரம்பு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர். இந்நிலையில் மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் ராகுல் ஷாம் பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்றே அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணாவிடம் முறையிட உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“