புதுடெல்லி,
இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது.
இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி காலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.
இதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் கோத்தபயா பதவி விலகினார்.
இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் பதவி விலக கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று காலை வெளியிட்டார்.
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
இந்த சூழலில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழல் பற்றிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்து உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இலங்கை பற்றி விரிவாக பேசப்படும். இதனை மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் இலங்கை நெருக்கடி சூழல் பற்றியும், அந்நாட்டில் இருந்து பலர் அகதிகளாக வெளியேறி தமிழகத்திற்கு வருவது பற்றியும் வருத்தம் தெரிவித்ததுடன், மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அண்டை நாடான இலங்கையில் தீர்வு ஏற்பட உதவிடும்படி வலியுறுத்தினர்.
இதனை முன்னிட்டு அரசு சார்பில் தன்னிச்சையாக முன்வந்து இன்று இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.