'நண்டு' படத்தில் பாடிய பூபிந்தர் சிங் மறைவு

பழம் பெரும் பின்னணிப் பாடகரும், இசைக் கலைஞருமான பூபிந்தர் சிங் நேற்று மாலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82. அவரது இறுதிச் சடங்கு இன்று(ஜூலை 19) நடைபெறும் எனஅவரது மனைவி தெரிவித்துளளார். பூபிந்தர் சிங் ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பூபிந்தர் சிங் யாரென்பது இளையராஜாவின் தீவிர ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். இளையராஜாவின் இசையில் மகேந்திரன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்த 'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'கைசே கஹுன்' என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பூபிந்தர் சிங் பாடியுள்ளார்.

'நண்டு' படத்தில் இடம் பெற்ற 'அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா…., 'மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே…' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். இப்போதும் இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றவை. அவற்றோடு அப்படத்தின் மற்றுமொரு பாடலான, 'கைசே கஹுன்' பாடலும் இருக்கும். மொழி புரியவில்லை என்றாலும் பூபிந்தர், ஜானகியின் குரலுக்காகவும், இசைக்காகவும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.

அமிரிட்சரில் பிறந்த பூபிந்தர் டில்லியில் வளர்ந்தவர். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்து தூர்தர்ஷனில் தொடர்ந்தவர். பங்களாதேஷைச் சேர்ந்த மிதாலி முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 80களின் மத்தியில் சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்டு மேடைகளில் பாடி வந்தார். மிதாலியும் பாடகிதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.