புதுடில்லி : கடந்த எட்டு ஆண்டுகளில் வங்கிகள், 8.60 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று பார்லி.,யில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், லோக்சபாவில் கூறியதாவது:நாட்டின் பொருளாதார சூழல், துறை சார்ந்த பிரச்னைகள், சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகள் உட்பட பல்வேறு காரணங்களால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கிறது.
இந்த வாராக் கடனை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திவால் சட்டம், நிதிச் சொத்து மறுசீரமைப்பு சட்டம் போன்ற சீர்திருத்த செயல்பாடுகளால் வங்கிகளின் வாராக் கடன் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த 2022 மார்ச் நிலவரப்படி, கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, 480 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கடந்த எட்டு ஆண்டுகளில் வங்கிகள், 8.60 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளன.
இந்நிலையில், 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக கடன் வாங்கியோரின் விபரங்களை சேகரிக்க, சி.ஆர்.ஐ.எல்.சி., அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கடன் மீட்பு தீர்ப்பாயம் விரைவாக வழக்குகளை முடிக்கும் வகையில், மேலும் ஆறு புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடன் மீட்பு தீர்பாயங்களின் விசாரணைக்கான கடன் வரம்பு, 10 லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.நிதி நிறுவனங்கள், கடன் தகவல் நிறுவனங்களிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், ஒவ்வொருவரின் கடன் விபரங்களை அனைத்து அமைப்புகளும் பகிர்ந்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement