புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆக. 10-ம் தேதியுடன் நிறைவடைவதால், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆக. 6-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஜூலை 19) நிறைவடைகிறது.
பாஜக தலைமையிலான தேஜகூ சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் (71) தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டிடத்தில், தேஜகூ வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உடனிருந்தனர்.
பின்னர் ஜெகதீப் தன்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இந்த வாய்ப்பு வழங்கியமைக்காக, பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவியவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். பிரதமர் மோடி கூறும்போது, “ஜெகதீப் தன்கர் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார்” என்றார்.
முன்னதாக, பல்வேறு கட்சி எம்.பி.க்களை நேற்று காலை சந்தித்த ஜெகதீப் தன்கர், தனக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கைவிடுத்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கர், ஹரியாணாவின் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் துணைப்பிரதமருமான தேவி லாலுடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். காங்கிரஸ் ஆதரவுடன் மத்தியில் சிறிதுகாலம் ஆட்சி செய்த சந்திரசேகர் தலைமையிலான அரசில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
நரசிம்ம ராவ் பிரதமரான பிறகு, காங்கிரஸ் கட்சியில் தன்கர் இணைந்தார். எனினும், ராஜஸ்தான் அரசியலில் அசோக் கெலாட் முன்னணித் தலைவராக உருவெடுத்த நிலையில், தன்கர் பாஜகவில் சேர்ந்தார்.