புதுடெல்லி/சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகின. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைவதால், புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பாஜக கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப் பட்டன.
மக்களவை, மாநிலங்களவையைச் சேர்ந்த எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700-ஆகவும், எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு மாநில மக்கள்தொகைக்கு ஏற்பவும் நிர்ணயிக்கப்பட்டது. ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10,86,431.
நாடாளுமன்ற வாக்குப்பதிவு மையத்தில், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
அதேபோல, அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையங்களில் முதல்வர்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெற்றது.
ஜூலை 21-ல் வாக்கு எண்ணிக்கை
தலைமை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி நேற்று கூறும்போது, “நாடு முழுவதும் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வாக்குப் பெட்டிகள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படும்” என்றார். வரும் 21-ம் தேதி டெல்லியில் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி அதிகாரபூர்வமாக பதவியேற்பார்.
முதல்வர் ஸ்டாலின் வாக்களிப்பு
சென்னையில் உள்ள சட்டப்பேரவை செயலக குழு கூட்ட அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். தொடர்ந்து, திமுக, காங்கிரஸ், பாமக எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற 3 எம்.பி.க்களில் ஒருவரான நாகை எம்.பி. செல்வராஜ் காலையில் வாக்களித்தார். காலை 11.45 மணிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட 62 அதிமுக எம்எல்ஏ.க்களும் வாக்களித்தனர்.
பிற்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ.க்கள், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், கணேசமூர்த்தி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் வாக்களித்தனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சா.மு.நாசர், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மாலையில் வாக்களித்தனர்.