சேலம்,
8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் மொத்தம் 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் 2 ஆட்டங்களில் தோற்றது. பின்னர் சரிவில் இருந்து எழுச்சி பெற்ற கில்லீஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.
இந்த தொடரில் வெற்றி கணக்கை தொடங்காத ஒரே அணியான முருகன் அஸ்வின் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் 4 ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி உள்ளூரில் முதல் வெற்றியை ஈட்ட தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விடலாம் என்பதால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.