சாங்வான்,
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் மைராஜ் அகமது கான் 40-க்கு 37 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் ருசித்தார்.
இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ‘ஸ்கீட்’ பிரிவில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உத்தரபிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான் தனதாக்கினார். தென்கொரியா வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்து வீரர் பென் லிவிலின் 26 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் அஞ்சும் மோட்ஜில், ஆஷி சோக்சி, சிப்ட் கவுர் சம்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.
இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.