“வியாபாரிங்க பருத்தியை வாங்க மாட்டேங்கறாங்க'' போராட்டம் நடத்திய விவசாயிகள்!

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்துக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 500 -க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு சுமார் 4,986 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோயிலில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்  கூடங்களில் விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இதில் செம்பானார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று கொள்முதல் நடைபெறும். இதற்காக விவசாயிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே தங்கள் பருத்தி மூட்டைகளுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 18.07.2022 காலை வரவேண்டிய பருத்தி வியாபாரிகள் மாலை 6 மணியைக்  கடந்தும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் மயிலாடுதுறை- தரங்கம்பாடி பிரதான சாலையில் செம்பனார்கோயில் கீழமுக்கூட்டு என்ற இடத்தில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வரவிடாமல் தடுக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டு கொள்முதலை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் விவசாயிகள். இவ்விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிட்டு வாரந்தோறும் தொய்வின்றி கொள்முதல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் போராட்டம்

வியாபாரிகள் தரப்பில் விசாரித்த போது, “இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும். சரியான எடை வைத்து தர வேண்டும். இவற்றையெல்லாம் சரி செய்து தந்தால்தான் நாங்கள் பருத்தி கொள்முதல் செய்ய முடியும்” என்றனர்.

தரங்கம்பாடி துணை தாசில்தார் மற்றும் செம்பனார்கோயில் இன்ஸ்பெக்டர் தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சு வார்த்தையில், “சுமை தூக்கும் தொழிலாளர்களை அதிகப்படுத்தி, 19.07.2022 முதல் விவசாயிகளின் பருத்தியை கொள்முதல் செய்யப்படும்” என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.