திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தொற்று போல ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் சிரங்கு மற்றும் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட் டது. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது. எனினும்,சோதனையில் உறுதி செய்யப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், கடந்த 13-ம் தேதி துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு வந்த ஒருவர், கேரள மாநிலம் கண்ணூரை அடுத்து உள்ள சொந்த ஊருக்கு திரும்பினார். இவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.