முல்லைப் பெரியாறு அணை- நீர்மட்ட கால அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்!

கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 135.40 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தால், கேரளாவிற்கு நீர் திறக்கப்படும் 13 மதகுகளை தண்ணீர் சென்றடையும்.‌ இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதை கருதி, தமிழக பொதுப்பணித்துறையினர் கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர். மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தற்போது முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்ட கால அட்டவணை (ரூல்கர்வ் அட்டவணை) பின்பற்றப்பட்டு வருகிறது.‌

பருவமழை காலம், கோடைகாலம் என காலநிலைகளுக்கு ஏற்றவாறு ஒரு நீர்தேக்கத்தில் பராமரிக்கப்பட வேண்டிய அல்லது நிலை நிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடுகளின் அட்டவணை ரூல்கர்வ் எனப்படுகிறது.

செயற்பொறியாளர் அலுவலகம்

இதன்படி அணை பகுதிகளில் நிலைநிறுத்தக்கூடிய தண்ணீரின் அளவு காலநிலைகளின்படி மாற்றி அமைக்கப்படும். பருவமழை காலங்களில் (ஜூன் முதல் அக்டோபர் வரை) நீர்வரத்து அதிகமாக உள்ளபோது அணையின் நீர்மட்டத்தை உச்சபட்ச அளவுக்கு உயர்த்த முடியாது. மார்ச், ஏப்ரல், மே போன்ற கோடைகாலத்தில் உச்சபட்ச அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம்.

அதன்படி, செப்டம்பர் 10-ம் தேதிக்குப் பிறகுதான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியும். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ரூல்கர்வ் அட்டவணையை ரத்து செய்யக்கோரி இன்று பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக கம்பம் – கூடலூர் சாலையில் ஊர்வலமாக வந்த விவசாயிகள் சங்கத்தினர் ரூல்கர்வ் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முல்லைப்பெரியாறு அணை

பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வினிடம், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.‌ அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய செயற்பொறியாளர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியே ரூல்கர்வ் அட்டவணை பினபற்றப்படுவதாகத் தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம், “முல்லைப்பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டது. அணையில் 145 அடிக்குத் தண்ணீர் நிரம்பினால்தான் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விட வேண்டும். ஆனால் 135 அடி கூட உயராத நிலையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தவறானது.

அன்வர் பாலசிங்கம்

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்குவது இல்லை. அவர்கள் கேரளத்துக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அலட்சியமாக இருப்பதாலும், ரூல்கர்வ் நடைமுறையாலும் முல்லைப்பெரியாறு அணையால் பாசன வசதி பெறும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 1,20,000 ஏக்கர் ஒருபோக நிலங்கள் பாசன வசதியின்றி நீர்த்துப் போகும்.

பொதுப்பணித்துறை அலுவலகம்

எனவே, மத்திய நீர்வளக் கமிட்டியின் பரிந்துரையில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து நீர்மட்ட கால அட்டவணையை (ரூல்கர்வ் அட்டவணை) ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். மேலும் ரூல்கர்வ் அட்டவணை பின்பற்றப்பட்டால் முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள ஐந்து மாவட்ட பாசன விவசாயிகளுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கண்காணிப்பு குழுவிடம் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.