நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் விடுமுறை தினங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்த நிலையில் மலைப்பகுதியில் தற்போது மழை குறைந்தது. அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.