மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 12 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை போனதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
கர்நாடக மாநில எல்லையில் உள்ளது ஆனெக்கல் பகுதி, இங்குள்ள முனிவெங்கடப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத், இவர், தனது குடும்பத்தோடு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் நள்ளிரவில், அவரது வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதையடுத்து கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பிய மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆனெக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆனெக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று நபர்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து அப்பகுதியில் நுழைந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடுபோன தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு 12 லட்சம் ஆகும், இவை அனைத்தும் மஞ்சுநாத் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்தது என்பது தெரியவந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM