பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் மூன்றாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார். கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார்.
அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கி உள்ளது. மொத்தம், 11 பேர் போட்டியிட முன்வந்த நிலையில், மூன்று பேர் விலகினர். அதனால், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை, எட்டாக குறைந்தது. இரண்டாவது சுற்றின் முடிவில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் 101 ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான, அட்டர்னி ஜெனரல் சுயெல்லா பிரவர்மன், 27 ஓட்டுகள் மட்டுமே பெற்று வெளியேறினார்.
மார்க்பர்க் எனும் கொடிய வைரஸ் – எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்றிலும் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அச்சுற்று முடிவில் ரிஷி சுனக் 115 ஓட்டுகள் பெற்று முதலிடத்தையும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென்னி மோர்டான்ட் 82 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். டாம் துகெந்தட் என்பவர் 31 ஓட்டுகள் மட்டுமே பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போதைய நிலையில், ரிஷி சுனக் உட்பட நான்கு பேர் அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்குள் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்.