டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதித்தால் தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக வெளிநடப்பு செய்வார்கள் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்ட சூழலில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களின் பேசிய அவர், மேகதாது விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட இருப்பதாக கூறினார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதித்தால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடனடியாக வெளிநடப்பு செய்வார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஏற்கனவே ஜூன் 17, 23 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.