நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கூறியதாக எழுந்த புகாருக்கு தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் கூறியதாக மாணவி ஒருவரின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உள்ளாடையில் மெட்டல் இருப்பதாக கூறி அதை அகற்ற வற்புறுத்தியதாகவும் இதனால் தனது மகள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பதிலளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடந்த நிலையில் உடனடியாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை எனக் கூறியுள்ளது. இருப்பினும், தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டதாகவும், அப்போது மாணவியின் தந்தை கூறியபடி எதுவும் நடக்கவில்லை என அவர் பதிலளித்திருப்பதாகவும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
மாணவியின் தந்தை அளித்த புகார் கற்பனையானது என்றும் தவறான உள்நோக்கத்துடன் அவர் குற்றஞ்சாட்டியிருப்பதாகவும் தேர்வு மைய கண்காணிப்பாளர் கூறியதாக தேர்வுகள் முகமை விளக்கமளித்துள்ளது. உள்ளாடையை அகற்றவேண்டும் என தங்களது விதிமுறைகளில் இல்லை எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
நீட் தேர்வு நடக்கும் அறைக்குள் உலோகம் (மெட்டல்) உள்ளிட்ட பொருட்களை மாணவ மாணவிகள் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் மாணவிகளின் உள்ளாடையில் உள்ள கொக்கி, உலோகம் என்பதால் அதனை அகற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியதாக இதற்கு முன்னரும் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM